Saturday, April 24, 2010

நியூட்டனின் மூன்றாம் விதி நா.முத்துக்குமார்


நியூட்டனின் மூன்றாம் விதி கவிஞர் நா.முத்துக்குமாரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு. எழுத்தாளர் கந்தர்வனின் முன்னுரையுடன் ஆரம்பமாகிறது.
அவரின் கூற்றுப்படியே புன்னகைக்கவும்,துயரப்படவும்,ஆழ்ந்து போகவும்,ஏராளமுள்ளன இந்த்த் தொகுப்பில்.
புன்னகைக்க

நியூட்டனின் மூன்றாம் விதி

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் வீட்டில் வசிக்கும் கவிஞர், மேல் வீட்டுக்காரரின் அன்றாட நிகழ்வுகளி்ன் உடன் விழைவான சப்தங்கள் கீ்ழுள்ளவர்களுக்கு எவ்வளவு இடைஞ்சல் என்று உணராமல் பாக்கு இடிக்கும் பாட்டி,குழவி நகர்த்தும் அம்மா,பாட்டுக்கு எம்பிக்குதிக்கும் குழந்தைகள் போன்ற அனைத்துக்கும் எதிர்வினையாக அவர் வீட்டு மின்விசிறியின் சப்தம் தலையணையும் தாண்டி உன் காதுகளில் சுழன்று கொண்டிருக்கும் என்று கூறும் கவிதை புன்னகைக்க வைக்கிறது.

உன் உறவுகள் கூட
உன்னைப் போலவே.
உன்னைப் பழிவாங்கும் விதமாக
என்னால் முடிந்தது ஒன்றுதான்.
எனதருமை மேல்தளத்து நண்பா..
தலையணையையும் மீறி
உன் காதுகளில்
சுழன்று கொண்டிருக்கும்
என் மின்விசிறி

அனுமதி இலவசம் என்ற கவிதையில்

கிராமத்திற்கும் பரவிவிட்ட விஞ்ஞான முன்னேற்றத்தையும் அதற்கு வெள்ளந்தியாக கிராம மக்களின் எதிர் வினைகளையும் படம் பிடிக்கிறது இக்கவிதை.

தாத்தாவின் மரணத்தை
வெளிநாட்டில் பார்ப்பதற்காய்
வீடியோ எடுத்தார்கள்.

கொடுத்து வைக்காத பாட்டி
விஞ்ஞானத்திற்கு அடங்காமல்
முன்னமே இறந்துவிட்டாள்.

மாரடித்து அழும் பெண்கள்
முந்தானையை திருத்திக் கொண்டதும்
வயலக்காவூர் பெரியம்மா
அழுவதை நிறுத்தி
கேமராவைப் பார்த்து புன்னகைத்ததும்
தாத்தா வளர்த்த நாய்
கால்களை நக்கிக் கொண்டிருந்ததும்
நிகழ்வின்
மூன்று உறுத்தல்கள்

என்றும்

அண்ணனின் திருமண கேசட்,கடைக்குட்டி கலாராணி நடனமாடிய பள்ளி ஆண்டு விழா கேசட்டும் தாத்தாவின் சிவலோக பதவியடைந்த புத்தம் புது கேசட்டும் உறவினர்கள் ஒன்று கூடும் வேளையில் போட்டுப் பார்கக உத்தேசித்துள்ளோம், நீங்களும் வரலாம், அனுமதி இலவசம் என்கிறார் கவிஞர்.

இன்று செய்த சமூக சேவைகள் என்ற கவிதையில்

கடற்கரையில் காணாமல் போன குழந்தையை உரியவரிடம் சேர்த்தது,பாட்டிக்கு தையல் ஊசிக்கு நூல் கோர்த்துக் கொடுத்தது,எலக்ரிசியனுக்கு அவன் மனைவியின் கடிதத்தை சங்கடத்துடன் படித்துக் காட்டியது போன்றவற்றைப் பட்டியலிடும் கவிஞர் கடைசியாக
இப்படி முடிக்கிறார்

....
சூரியனும் தீக்குச்சியும்
என்று தலைப்பிட்ட
என் புதிய கவிதையை
எழுதாமல் விட்டு விட்டேன்

தலைப்பை திரும்பப் படித்தால் அவரின் குறும்பு புரியும்.

காதல் 2000 கவிதையில்

பழங்காலத்துக் காவியங்களில் கூறப்படும் நூலிடையாள்,இடை மெலிந்தாள் போன்றே இந்நாட்களின் கவிதையாக்கியிருக்கிறார்.

என் கைக்கடிகாரத்தின்
தோளினால் செய்த பட்டை
ஐந்தாம் துளையிலிருந்து
மூன்றாம் துளைக்கு
முன்னேறியும்
அடிக்கடி வாட்ச் கழல்வதை
அவனிடம் யார் சொல்வது?

மொத்தத்தில் நியூட்டனின் மூன்றாம் விதி கவிதைத் தொகுப்பு எதார்த்தங்களின் எதிர்வினைகளாக உள்ளது.

நியூட்டனின் மூன்றாம் விதி • நா.முத்துக்குமார்
(கவிதைத் தொகுப்பு)

ஐந்தாம் பதி்ப்பு
பட்டாம்பூச்சி பதிப்பகம்
சென்னை வெளியீடு